Monday, June 13, 2016

பரவாதிருக்கட்டும் குற்றவியல் நோய் வரும் தலைமுறைக்கும்


வளர்ந்துவரும் உலகில் கூடவே வளர்கிறது குற்றவியலும். தினம் தினம் படிக்கும் செய்தித் தாளில்களில் தனக்கென்று ஒரு இடம்பிடித்துவிட்டது இக்குற்றவியல். “”ச்செ... என்ன பிறவியோ....” என்று அலுத்துக் கொண்டு
கடந்து செல்லும் நமக்கு தெரிவதில்லை, நாளை என் சம்பந்தப்பட்ட செய்தி கூட இதில் அடங்கலாம் என்று. இன்று நடக்கும் குற்றங்களில் முக்கால்வாசி
நம்மோடு நமக்கு மத்தியில் சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது.



ஏன், எப்படி, எதனால் என்ற கேள்விகளை கடந்து போகையில் புலப்படுவது என்னவோ உப்புச்சப்பில்லாத பேசியே தீர்த்துக் கொள்ளக்கூடிய ஒரு சாதாரண விடயம் தான். ஆக, இந்த சாதாரண விடயம் குற்றவியலுள் புக காரணம் யாது? கோபம், பகை, வெறி என பல காரணிகளை முன் வைத்தாலும், இவை எல்லாவற்றையும் தாண்டி அந்நபருள் ஏற்பட்டிருந்த மனவழுத்தம் என்றே கூறலாம்.

வேகமாய் சுழலும் உலகிற்கேற்ப எம் செயற்பாடுகளையும் வேகமாய் செய்ய வேண்டியுள்ளது. இதனடிப்படையில் நூற்றுக்கு எண்பது சதவீதத்தினர் மனவழுத்தத்திற்கு ஆட்பட்டு இருக்கின்றனர்.

எம்மில் சிலர் ஏதோ ஒரு வகையில் எம் மனவழுத்தங்களை விடுத்துக் கொள்கிறோம். ஆனால், பலர் அதிலிருந்து மீள வசதியின்றி தனக்கு மனவழுத்தம் இருப்பது கூடத் தெரியாது வாழ்கின்றனர். அப்படி விடுக்கப்படாத போக்கப்படாத அழுத்தங்கள் தான் இப்படி மாறுவேடம் பூண்டு குற்றவியலுக்குள் புகுமளவிற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இந்தளவு மக்களுக்கு மனவுளைச்சல், மனவழுத்தம் ஏற்பட என்ன காரணம் என ஆராய்கையில் ஒவ்வொருவரினதும் சமூகத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப அவை மாறுபட்டாலும் பொதுவாக புலப்படுவது தனிமையும் அதை போக்கிக் கொள்ள அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளும் தான்.  நல்ல புத்தகங்கள் வாசிப்பது, ஆன்மீகத்தில் ஈடுபடுவது மற்றும் விளையாட்டுக்களில் ஈடுபடுவது போன்ற பொழுது போக்கு அம்சங்கள் இன்று காணாமல்
போய்விட்டன.



அதிகரித்து வரும் குற்றவியல் பற்றி முற்போக்கு சிந்தனையாளரும் பெண்ணிய வாதியுமான திருமதி பத்மா சோமகாந்தனிடம் இது பற்றி வினவியபோது அவர் கூறியதாவது;

முன்னர் பயபக்தி மற்றும் சமூகக் கட்டுபாடு என்பன இருந்தது. ஒரு நபர்
சமூகத்தில் தனக்கொரு அவப்பெயர் ஏற்படுவதை விரும்பமாட்டார். மேலும், அக்காலத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை அதிகமாக கண்கானித்துக் கொண்டே தான் இருப்பர். அத்துடன் பிள்ளைகளும் பெற்றோருக்கு மிகவும் கீழ்ப்படிந்தே நடப்பர். அக்காலத்தில் பிள்ளைகள் பெற்றோர், ஆசான்மற்றும்
ஊர்ப் பெரியவர் ஆகியோரின் கண்காணிப்பின் கீழேயே இயங்கினர் ஆதலால்,  குற்றவியல்கள் அக்காலத்தில் குறைந்திருந்தன.

முன்பிருந்தை விட தற்காலத்தில் தங்கி வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதில் முதியவர், குழந்தைகள் இருவருமே அடங்குவர்.



இன்றைய காலத்தில் மக்களின் பொழுதுபோக்கு அம்சத்தில் முக்கிய இடம் வகிப்பது தொலைக்காட்சி மற்றும் சினிமா.ஹீரோ வருகிறார் நான்கு பேரை அடிக்கிறார், கொலை செய்து விடுகிறார். ஆனால் அவர் ஹீரோ; இப்படி இருக்கும் போது பார்ப்பவர்களுக்கு அது சகஜமான விடயம் ஆகிவிடுகிறது.அத்தோடு சினிமா பாடல்கள் எல்லாம் இரட்டை அர்த்தத்திலேயே வெளிவருகின்றது.அன்றைய காதல் பாடல்கள்; காதலை புனிதப்படுத்தின. இன்றைய பாடல்கள் காதலூடாக காமத்தை தூண்டியிழுக்கையில் தவறுகள் எப்படி ஏற்படாமல் இருக்கும்.

மேலும் முன்னர் பாடசாலைகளில் ஒழுக்கநெறி மிக முக்கியமாக இருந்தது. இன்று புள்ளி அதிகரிப்பிற்கே முக்கியத்துவம் கொடுக்கிறது. அன்று போல் இன்றும் பாடசாலைகள் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பின்
நாளைய சமூகத்தில் குற்றவியலை இல்லாது செய்யலாம்.
மேலும் இன்றைய பெண்களில் பலர் வேலைக்குச் செல்வதனால் தன்
குழந்தைகளை இன்னொருவரிடத்தில் விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் போது கூட குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படலாம்.  ஆகவே இவ் விடயத்தில் கவனம் தேவை. பொதுவாக வெளிநாட்டுக்குச் செல்லும்  பெண்களின் பிள்ளைகளே இவ்வாறு அதிகமாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். வெளிநாட்டு செல்ல விருக்கும் பெண்கள் தன் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி இனியாவது நன்றாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். தவறுகளுக்கு எல்லாம் அடிப்படை தவறாகஅமைவது போதைப்பொருள் பாவனையே. அதை தவிர்த்தாலே பல தவறுகளை குறைக்கலாம்.என்று உரைத்தார்.

அவர் கூற்றுக்களிலிருந்து பார்க்கும் போது உணர வேண்டியது என்ன வென்றால் புதுமை நோக்கிய எம் பயணத்தில் பழைமை என்று நாம் ஒழுக்கத்தையும் ஒதுக்கிவிட்டோம் என்பதே.

குற்றங்களில் பாலியல் துஷ்பிரயோகம் இன்று தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிறது போலும். ஏனெனில் இன்றைய நாட்களில் தன்  தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கென கைக்குள் அடங்கிய  கைப்பேசிகள், அனைத்துரக தகவல்களையும் தன்னகத்தே கொண்டு,பாலியல் ஆசைகளுக்கும்
பாலமிடுகிறது. ஆனால் அந்த பாலங்கள் பச்சிளம் பாலகர்களை நோக்கி அமைக்கப்படுவதே வருத்தக்திற்குரிய விடயம். மேலும் இவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது சமூகத்தின் பொறுப்பாகும். இதுபற்றி மனோதத்துவ வைத்தியர் கணேசன்  கூறியதாவது, ”இன்றைய சட்ட ஒழுங்குகள் சீரமைக்கப்பட வேண்டும். அவை சீரமைக்கப்படின் குற்றவியல் குறையும். மேலும் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்பட்டவர்களை அவர்களது பெற்றோர் அன்புடனும், பொறுப்புடனும், மீண்டும் அவ்வாறானதொரு பிரச்சினை ஏற்படாத வாறும் அவர்களை பாதுகாக்க வேண்டும். அத்துடன்
சமூகம் அவர்களை வித்தியாசமாப் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். போதைப் பொருளுக்கு
அடிமையானவர்களை போதைப்பொருள் தடுப்பு அமைப்புகளுக்கு ஒப்படைக்கலாம். அவர்கள் திருந்தி வாழ்வதற்கு சமூகம் உதவி செய்ய வேண்டும் அதை விடுத்து அவர்களை தூற்றுதல், தவிர்த்தல் மற்றும் விலக்கி வைத்தல் என்பன மீண்டும் அவர்களை அப் பழக்கத்திற்கு அடிமையாக்கி விடலாம் என்றும் கூறினார்.

இவ்வாறான நிலைமைகள் தொடர்ந்தால் நாம் எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூகம் என்பதை இழந்து விடுவோம். எங்குபார்த்தாலும் ஏதேனும் ஒரு குற்றம் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கும். இந்நோய் எம் எதிர்கால சந்ததிக்கு  பரவாமல் தடுக்க என்ன செய்யலாம், வழிகூறுகிறார். பிரபல மனோதத்து நிபுணர் ஒருவர்.

முன்னர் எல்லாம்  ஒரு கொலை நடந்நதுவிட்டது என்றால் அது ஒரு பெரிய விடயம். இப்போழுது அவை சாதாரணமாகி விட்டன. அதற்கான காரணம்
செய்திகளை அதிவேகமாக நாம் அறிந்து கொள்வதாகக் கூட இருக்கலாம். இப்பொழுது சிறுவர்களுகம் கூட மிகவும் அறிவு பூர்வமாகவும் தேடல்
மிகுந்தவர்களாகவும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு தகவல் திரட்டிக் கொள்ள இணையம் முதற்கொண்டு பல வழிகள்  கிடைத்து விட்டன. மேலும் அன்று பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து
இருந்தனர். ஆனால்  இன்று நிலைமை தலைகீழாக இருக்கின்றது.அத்தோடு தற்போதைய பெற்றோர் தன் பிள்ளைகளை பற்றி தேடிப்பார்ப்பது மிகக்குறைவு தன் பிள்ளைகளின் கல்வி நிலை எவ்வாறு இருக்கின்றதென்று கூட அவர்களுக்கு தெரிவதில்லை. காரணம் பெற்றோருக்கு பிள்ளைகளவிற்கு அதிவேகமாக தொழில்நுட்பத்தோடு  பயணிக்க முடிவதில்லை. ஆகவே தான் சொல்வது, செய்வது சரியே எனும் மனநிலைக்குள் பிள்ளைகள் சரிபிழை
மறந்து செயற்பட விழைகின்றனர்

பிள்ளைகள் மத்தியில் இவ்வாறானதொரு போக்கு நிலவுவதற்குக் காரணம் அவர்களை.  சமூகத்தோடு பெற்றோர் பழகவிடுவதில்லை.ஆகவே, அவர்கள் பிடிவாதமிக்க குழந்தைகளாக வளர்கின்றனர். ஏனைய பிள்ளைகளோடு சேர்ந்து விளையாட விடுவதுமில்லை.  அப்பிள்ளைகளின் விளையாட்டெல்லாம் ஐபோன், ஐபார்ட், ஸ்மாட் போன்களில்தான்.  இவ்வாறு வளரும் பிள்ளை எப்படி ஆரோக்கியமாக வளரும், அக்குழந்தைகள் மனவழுத்தத்திற்கு ஆட்பட்டு விடும்.

பிள்ளைகளை சமூகமயமாக வளர்த்தல் வேண்டும்.  மேலும் சிறுபராயம் முதல் குழந்தைகளுக்கு பாலியல் மற்றும் உளவியல் தொடர்பாக கற்றுக் கொடுத்தல் அவசியம்.  இவை முதலில் பெற்றோராலும் பின் பாடசாலைகளிலும் பயிற்றப்பட வேண்டும்.

பெற்றோர் பிள்ளைகளை புரிந்துகொள்பவர்களாகவும் அவர்களின்
நண்பராகவும் இருக்கும்போது அவர்கள் பெற்றவர்களிடம் அனைத்து விடயங்களையும் பகிர்ந்து கொள்வார்கள்.  அப்பொழுது அவர்களை உங்களால் சிறப்பாய் ஒரு நல்ல சமூகம் நோக்கி வழிநடத்தக்கூடியதாய் இருக்கும்.

இன்றைய நாட்களில் முதியோர்களுக்கான பொழுதுபோக்கு அம்சமாக அமைவது தொலைக்காட்சி மட்டுமே. மேலும், தொலைக்காட்சிகள் தொல்லைக் காட்சிகளாகவும் காமத்தூண்டிலிகளாகவுமே தற்போது செயற்படுகின்றன என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பொதுவாகவே ஆண்களுக்கு 50 வயது வரையில் பாலியல் சுரப்பிகள் பெண்களை விட அதிகமாகவே சுரக்கும். இதன் போது சில ஆண்கள் தன்னுடைய காமத்தினை வெளிப்படுத்த வழியில்லாதவிடத்து அதை சிறு குழந்தைகள் மீது வெளிப்படுத்தி விடுவதே இன்றைய சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு வித்திட்டுள்ளது என்றும் கூறலாம். மேலும், பெரியோர் சிறியோரை தேர்ந்தெடுப்பதற்கான காரணம் அவர்களை மிரட்டி அல்லது ஏமாற்றி எளிதாக தம் இச்சைக்கு உட்படுத்தி விடலாம் என்பது அறிவியலான யதார்த்தக் கூற்றாக இருந்தாலும் அது மாபெரும் தவறு.

இதனையொழிப்பதற்கு பெற்றோர்கள் சிறுவயது முதலே தன் பிள்ளைக்கு பாலியல் பற்றிய அறிவை வழங்க வேண்டியது அவசியம். மேலும், தன் வீட்டில் இருக்கும் பெரியவர்களோடு மரியாதையாகவும் அதேசமயம் ஒழுக்கமாகவும் நடந்து கொள்ள வழிவகுத்தல் வேண்டும்.

குற்றவியல் என்பதை மனமாற்றம் மூலம் முற்றாக ஒழிக்கலாம்.  அதைவிடுத்து இதனடிப்படை என்னவென்று ஆராயாமல் விட்டுவிடுவோமாயின் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தி கண்டறிந்து அவற்றை பின்பற்றுவீர்களாயின் அதிரடி கோபம் ஏற்படுத்தும் வினையை தடுக்கலாம்.  குற்றவியலையும் குறைக்கலாம்.

No comments:

Post a Comment