Tuesday, September 20, 2016

மலையக பெண்கள்  சந்திக்கும்  சவால்கள்

மலையகச் சமூகத்தில் என்றுமே ஹீரோ, ஹீரோயின் இரண்டுமே பெண்கள் தான். இதை ஏற்றுக்கொள்வது ஆண்களுக்கு கஸ்டமாக இருந்தாலும் உண்மை இதுதான். என்றும் பெண்ணின் பொறுமைக்கும் சகிப்புதன்மைக்கும் உதாரணமாக இருப்பவர்கள் இந்த மலையகப் பெண்கள் தான். மலையகச் சமூகத்தின் கடுகளவு முன்னேற்றத்திற்கு வழிவகுத்திருப்பதும் இந்த பெண்கள் தான். அத்தகு பெண்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுயமுன்னேற்றம் என்பது எந்தளவில் உள்ளது என்று பார்த்தால், அவை கேள்விக்குறியே. என்னத்தான் பெண்கள் அத்தனை பொறுப்பையும் சுமந்துக்கொண்டு இருந்தாலும் குடும்பத்தின் முக்கிய முடிவெடுப்பது என்பது அக்குடும்பத்தலைவர் எனும் ஆண்களின்பால் தான் இருக்கின்றது. இது மலையகத்தின் மறைமுக ஆணாத்திக்கதிற்கான ஒரு உதாரணம். மலையகத்தை பொறுத்தவரை பெண் என்பவள் வலிமையானவளாகவும் ஆண் என்பவன் ஆதிக்கம் செலுத்துபவனாகவும் காணப்படுகிறான்.

மலையகப் பெண்ணின் வாழ்க்கை

வாழ்க்கை என்பது வட்டப்பாதை என்பது எப்போதுமே இவர்களுக்குத்தான் பொருந்தும். இவர்களின் நடை, உடை சற்று மாறினாலும் பாவனை என்பதென்னவோ நூற்றுக்கு ஐந்து வீதம் கூட மாறவில்லை என்பதே உண்மை. பொதுவாக மலையகப் பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கு எழுதப்படாத ஒரு நேர அட்டவணை ஒன்று உள்ளது. தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, நெருப்பபையே உரையவைக்கும் குளிரில் பாத்திரங்களை கழுவி, வீட்டை சுத்தம் செய்து, வாசல் பெருக்கி, கோலமிட்டு பின் காலை மற்றும் மதிய உணவு சமைத்து, பிள்ளைகளை எழுப்பி, பாடசாலைக்கு அவர்களை தயார் செய்து, பாடசாலைக்கு அனுப்பிவிட்டு அவர்களும் வேலைக்குச் செல்வர். இவர்களின் வேலை நேரம் காலை 7 மணி முதல் மாலை 5.30 மணிவரை பின் இதற்கிடையில் பகல் நேரங்களில் சிலர் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு போவதுண்டு. ஆனால் பலரோ பகல் உணவையும் கட்டி எடுத்துக் கொண்டு போவர். மாலை வந்ததும் மீண்டும் இரவு உணவு செய்துவிட்டு, பல நேரங்களில் தன் போதைக்கணவரோடு போராடிவிட்டு தூங்கி மீண்டும் அடுத்தநாள் அதே வாழ்க்கை...... இவர்களுக்கு பொழுது போக்கு என்றமைவது டி.வி சீரியல்கள் தான். 

வெளிநாட்டு மோக விதை

இப்படிப்பட்ட ஓட்டமிக்க வாழ்வில் இவர்களின் ஒருநாள் சம்பளம் என்பது சொற்பம்தான். ஆனால் குடும்பத்தின் அதிகபட்சம் சம்பாரிப்பதும் அவர்கள்தான். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில் பொதுவாகவே பெரும்பாலான ஆண்கள் இவர்களுக்கு எந்தவொரு உதவியும் செய்வதில்லை. மேலும் மலையகத்தை பொறுத்தவரை ஆண்களுக்கு கிடைக்கும் வேலைகளும் அவர்களுக்கு பெறுமளவில் வருமானம் ஈட்டி தருவதில்லை. ஆகவே அங்கிருக்கும் ஆண்கள் வேலைசெய்வதில் அதிக நாட்டம் காட்டுவதில்லை. மலையத்தில் வசிக்கும் பெண்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு அதிக நாட்டம் காட்டுவதும் இதனால்தான். ஆனால் இதன்மூலம் ஏற்படும் பாதிப்புக்களை அவர்கள் விளங்கிக்கொள்வதில்லை. பெண்களை விடுத்து ஆண்கள் ஏன் போவதில்லை? காரணம் ஆண்களை விட பெண்களுக்கே வெளிநாட்டு வேலையில் அதிக சம்பளம் கிடைக்கின்றது. ஆகவே பெண்கள் வெளிநாட்டு வேலைக்கு செலவதற்காக நிர்பந்திக்கப்படுகின்றனர். நாட்டு மக்கள் நலனுக்காய் அரசாங்கம் இது சார்ந்த பல சட்டதிட்டங்களை கொண்டுவந்த போதும், அவற்றை மீறி சட்டமுரணாய் செயற்படும், ஆசைக்காட்டி மோசம் செய்யும் தரகர்களும் மலையகப்பெண்களை வட்டமிட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். முன்னைய ஆண்டுகளை விட இந்தாண்டு வெளிநாட்டு வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை குறைந்திருக்கின்றது என்று ஜனாதிபதி கூறியிருந்தார். வரும்பாலங்களில் இவ்வெண்ணிக்கை மேலும் குறையுமாயின்; அது மிகப்பெரும் சந்தோஷமே.

படையெடுக்கும் இளசுகள் 

அத்துடன் இன்றைய இளையத் தலைமுறையினர் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதை பெருமளவு விரும்புவது இல்லை. அவர்கள் அங்கிருந்து வெளியேறி தலைநகருக்கு வந்து ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் பல இதர வேலைகளைச் செய்யத்தான் விரும்புகின்றனர். அவ்வாறு நகரங்களுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பென்பது துளியளவேனும் இல்லை. மேலும் சிலருக்கு சிங்கள மொழியும் தெரியாது. ஆகவே இவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் ஏறாளமானவவை. அவ்வாறு வரும்பெண்கள் கூடுதலாக 15 வயதைப் பூர்த்திசெய்தவர்களாகத்தான் இருப்பர். தடுமாறும் வயதில் தனிமை படுத்தப்பட்ட இவர்களிற்கு வேலைத்தளம் என்பதும் எத்தனை பாதுகாப்பு மிக்கதாய் இருக்கும் என உறுதியாக கூறமுடியாது. அங்கு அவர்களுக்கு உறுதுணையாய் நிற்கும் ஆண்களிடம் தம் மனதை பறிக்கொடுத்து காதலாகி பின் சில சாவல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. மேலும் சிலர் கர்ப்பம் தரிக்க வேண்டிய சூழ்நிலைக்கூட ஏற்படுகிறது. அதன்பின் இவர்கள் மனமுடைந்து மீண்டும் தம் சொந்த ஊரிற்கே போய்விடுகிறார்கள். ஏனெனில் கலாச்சாரம் மிக்க சூழலில் வளரும் இவர்களுக்கு இதனை மனதளவில் எதிர்க்கொள்ள முடிவதில்லை. இதற்கு விதிவிலக்காகவும் சில பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவ்வாறு வேலைக்கு வந்து முன்னேறி நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் பெண்களும் உள்ளனர். ஆனால் நூற்றுக்கு எண்பது சதவீதமான பெண்களின் வாழ்க்கை இவ்வாறே அமைகிறது. 

இதற்கான காரணம் என்ன? மலையகத்தை பொறுத்தவரை பெண்கள் இன்னும் கலாச்சாரத்துள் கட்டுப்பாடுடன்தான் வளர்க்கப்படுகின்றனர். கொழும்பு என்பது அனைத்து   கட்டுப்பாடுகளையும் உடைத்து, தன் விருப்பம்போல் ஒருவர் வாழ்வதற்கான சமூகமே என்ற கடப்பாடும் அவர்களித்தில் காணப்படுகிறது. மேலும் கொழும்பில் வேலை செய்கிறேன் என்று கூறிக்கொள்வதை அவர்கள் பெருமையாகவும் எளிதாவும் கருதுகிறார்கள். அதன் வெளிப்பாடே இந்நிலைமைகள். தங்களுக்கென்று ஒரு கட்டுப்பாடுடனும், எந்த நிலைமையினையும் தைரியமாக சமாளிக்கத் தெரிந்தவர்களுக்கு இத்தகு இடர்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிக மிகக்குறைவே. 

கவனிக்கப்படாத சுகாதாரம் 

மலையக பெண்கள் தமது உடற் சுகாதாரம் பற்றி போதிய அக்கரை காட்டுவதே இல்லை. இன்றும் கூட செருப்புக்களின்றி நடக்கும் சில பெண்கள் இருக்கத்தான் செய்கின்றனர். காடு மேடுகள் என ஏறி இறங்கி தேயிலை பறிக்கும் பெண், செருப்பின்றி நடப்பதால் காலில் கற்கள் மற்றும் குச்சிகள் குத்துகின்றன. அவற்றை தவிர்ப்பதற்கே செருப்பணியுமாறு வலியுறுத்தப்படுகிறது. அது இன்று பலபேரிடம் நடைமுறையில் உள்ளது வரவேற்கத்தக்கது. அவர்கள் தேயிலைச்செடிகளுக்குள் புகுந்து நடக்கும் போது தேயிலை குச்சிக்கள் அவர்களின் கால்களில் கீரி விடுகின்றனறன. அதனைத் தடுப்பதற்காகதான் அவர்கள் உடலைச்சுற்றி நீளமாக துணிகள் இரண்டை சுற்றி அதன்மேல் சாக்கு போன்ற தடிமனான ஏதேனுத் சுற்றிக் கட்டியிருப்பார்கள். மேலும் தேயிலை தோட்டத்துள் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று தேயிலைக்குள் வதிவிடம் அமைக்கும் பாம்புகள் மூலம் தாக்கப்படுகின்றமை. அத்தோடு அடிக்கடி நாம் கேள்விப்படும் ஒரு விடயம் குளவிக் கொட்டுக்கு இழக்காகுதல். மேலும் மழை நேரங்கள் என்றால் அட்டைக்கடி, மலைகள் வழுக்குதல் போன்ற பல பாரிய சிக்கல்களுக்கும் இவர்கள் முகம் கொடுக்க நேரிடுகிறது. அது மட்டுமின்றி அண்மையில் சிறுத்தைகள் நடமாட்டமானது மலையக தோட்டப்பிரதேசங்களில் அதிகரித்திருப்பதையும் அவதானிக்க கூடியதாகவுள்ளது. இவை உயிராபத்தை விளைவிக்கக்கூடியவை. ஆகவே அத்தகு சந்தர்ப்பங்களில் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம்.  

அவர்கள் எதிர்நோக்கும் பிரதான சுகாதாரப்பிரச்சனை என்றால் அது மலசல கழிப்பிடம் தான். மலையகத்தில், வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் தான் மலசலக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் இரவில் மலசலகூடம் செல்வது என்பது பெண்களுக்கு பெரும்பாடாய் இருப்பதோடு பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாய் உள்ளது. வீட்டு;க்கு வீடு மலசலக்கூடம் எனும் திட்டம் இனிவரும் அமைச்சர்களின் கவனத்திறகாவது வருமா? மேலும் பலமணிநேரம் வேலைப்பார்க்கும் இவர்களுக்கு சிறுநீர் கழிப்பதற்கான தேவை ஏற்படும் பட்சத்தில் இவர்கள் அதனை பூர்த்தி செய்யும் விதங்கள் பாதுகாப்பற்றதாக இருக்கின்றது. இந்நிலைகள் மாற்றப்பட வேண்டும். இத்தகு அத்தியவசிய தேவைகளை பாதுகாப்பாக பூர்த்தி செய்வதற்கு தோட்டத்து நிர்வாகங்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். 

வேண்டிய மாற்றம் 

மலையத்தில் தேயிலையின் வாசம் கொடிக்கட்டி பறக்க காரணமாக இருப்பது அங்கிருக்கும் பெண்கள் தான். அந்த பெண்களின் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் பார்த்து அசராமல் இருக்கமுடிவதில்லை. இத்தகு வலிமை மிக்க பெண் சமூகம் எதிர்நோக்கும்  பிரச்சனைகளின் சாராம்சமே இவை. மலையகத்தில் பற்பல மகளீர் அமைப்புக்கள் இருந்து இன்னும் இந்த பெண்களை முன்னேற்றி கொண்டுவருவதற்கும் இவரிகளின் அறியாமையை நீங்கி வழிக்காட்டுவதற்கும் எத்தகு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன, அவை எந்தளவிற்கு நடைமுறையில் உள்ளன? அவற்றினால் நம் மலையக பெண்சமூகம் எந்தளவு பயன்பெற்றுள்ளது என ஆராய்கையில் இந்த அமைப்புகள் எதற்காக எனும் கேள்வியையே எழுப்பிச்செல்கின்றன. இனிவரும் காலங்களிலாவது இந்நிலை மாறவேண்டுமெனில் பெண்கள் தங்களை வலுவூட்டிக் கொள்ள தாமாக முன்வர வேண்டும். தன் குடும்பத்தை வழிநடத்த தெரிந்த அவர்களுக்கு தன்னை வழிநடத்தி சுயஉரிமையுடனும் சுகாதாரத்துடனுமான வளமான சமூகத்தை உருவாக்குவதென்பது சாதாரணவிடயமே. ஆகவே மலையகப் பெண்கள் தங்களை முன்னிருத்த பழகவேண்டும். மலையக பெண்கள் அமைப்புக்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் இனிவரும் காலங்களிலாவது இதற்கு துணை நிற்கவேண்டும். 

No comments:

Post a Comment