Monday, June 13, 2016

காவல்துறைக்குள் ஒரு கறுப்பு ஆடா?



சித்திரை புதுவருடக் கொண்டாட்டத்தில் நாடே திளைத்திருந்த வேளையில் லக்கலயில் ஒரு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக ஓர் செய்தி கிடைத்திருந்தது. என்ன ஏது என்று ஆராயப்பட்டபோது காவல்நிலையத்திலேயே களவு போய்விட்டதா? அதுவும் பாதுகாப்புப் பெட்டகத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளா? என்று வாய்பிளக்க வைத்துவிட்டது இச்சம்பவம்.



லக்கலயில் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தில் கடந்த 14ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவ்வேளையில் இராப்பொழுது காவலில் ஈடுபட்டிருந்த ஒரு அதிகாரி , தொலைபேசி இயக்குநர் மற்றும் இரண்டு உபபொலிஸ் அதிகாரிகள் ஆகிய
நால்வரும் கடமையில் இருந்திருக்கின்றனர். லக்கல பொலிஸ் அதிபதி எஸ். எம். விக்ரமசிங்ஹ சம்பவம் தொடர்பில்   மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள இம்முறைப்பாட்டை இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைத்தார். அதன் பின் பல கோணங்களில் அன்று பொலிஸ் நிலையத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் பலரிடம் நடந்த விசாரணைகளில் இரகசியப் பொலிஸûக்கு சில துப்புக்கள் துலங்க ஆரம்பித்தன. அதனடிப்படையில் அன்று கடமையில் இருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் வேலை இடைநிறுத்தம்
செய்யப்பட்டனர்.

14ஆம் திகதியன்று விடுமுறை மற்றும் கொண்டாட்ட நாள் என்பதால் லக்கல பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்கவில்லை. புதுவருடத்தை முன்னிட்டு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளில் ஒருவரை தவிர, மற்றைய மூவரும் நன்றாக மது அருந்திவிட்டு மது மயக்கத்தில் இருந்திருக்கின்றனர்.
அந்த சமயம் பார்த்து பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த டி.56 ரகத் துப்பாக்கி மற்றும் 5 கைத்துப்பாக்கிகளும் திருடப்பட்டுள்ளன. பின் 16ஆம் திகதியளவில் அவை லக்கல பிரதேசத்தில் இருக்கும் ஒரு விகாரையில் இருந்து மீட்கப்பட்டன.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த நாளே லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்து ஏறத்தாழ  பன்னிரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பல்லேகமவில் அமைந்துள்ள வெல்லேகல சந்தகம விகாரையில் அதிகாலையில் அவ்விகாராதிபதி முகம் கழுவுவதற்காய் நீர்த்தாங்கி (கூச்ணடு) அருகில் வந்தபோது அங்கிருந்து கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு பொதியில் சுற்றிய வண்ணம் ஆயுதங்கள் இருந்திருக்கின்றன. இதனைக் கண்ட விகாராதிபதி உடனடியாக பொலிஸûக்கு இது தொடர்பாக தெரிவித்துள்ளார். அவை பொலிஸ் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட ஆயுதங்கள் தான் என பொலிஸாரினால் உறுதியளிக்கப்பட்டு மீட்கப்பட்டன.
ஊர் முழுவதும் தேடுதல் சோதனைகள் நடைபெறுவதால் திருடியவர்கள் துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருக்க முடியாமையினாலும்; அவற்றை வேறு எங்கும் எடுத்துச் செல்ல முடியாமையினாலும் அவற்றை விகாரையில் விட்டுச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன், அது நிச்சயமாக விகாரையில் உள்ளவர்கள் கண்ணில்பட வேண்டும் என்றே அவ்வாறு வைக்கப்பட்டிருக்கின்றது என்றும் விசாரணைப் பொலிஸாரினால் கூறப்படுகிறது.

தொலைபேசி இயக்குநராக இருந்த அதிகாரி, சாரம் அணிந்து ஒரு துப்பாக்கியுடன் பின்வாசல் வழியே இராக்காவல் அதிகாரி இருந்த பக்கமாக சென்றதை தான் பார்த்ததாகவும் கூறியுள்ளார். மேலும் ,அந்த பாதுகாப்பு பெட்டகம் சாவியினாலே திறக்கப்பட்டுள்ளது. சாவிகள் இருந்த கொத்தில் மொத்தம் 17 சாவிகள் இருந்திருக்கின்றன. அவ்வாறிருந்தும் சரியான சாவியிட்டு அப்பெட்டகத்தை திறந்திருப்பது பல சந்தேகங்களுக்கு வித்திடுகிறது. அந்த சந்தேக அம்புகள் தான் இப்பொழுது அங்கு வேலைசெய்யும் பொலிஸ் அதிகாரிகள் மீது பாய்ந்துள்ளன. ஏனெனில் இச்சம்பவம்  இடம் பொருள் ஏவல் காலம் பார்த்து திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதிச்செயலாகவே விளங்குகிறது.

ஆயுதம் கடத்தியவர்கள், இப்பொலிஸ் நிலையத்தை பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறெனில் பொலிஸில் உள்ள அல்லது ஏற்கனவே இப்பொலிஸ் நிலையத்தில் வேலைசெய்த ஒருவரின் அல்லது சிலரின் உதவி இவ் ஆயுதக் கொள்ளைக் கும்பலுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஏனெனில் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தில் அருகில் எவ்வித கட்டடங்களோ வீடுகளோ இல்லை. இரண்டடுக்குக் கொண்ட இப்பொலிஸ் நிலைத்தில் ஒரு சிசிடிவி கமரா கூட பொருத்தப்பட்டிருக்கவில்லை. ஆக ஆள்நடமாட்டம் ஒடுங்கிய இடமாக இந்நிலையம் அமைக்கப்பட்டதுடன், புதுவருடதினத்தன்று நால்வர் தான் கடமையில் இருப்பார்கள் என்று அவர்களுக்குத் தெரிந்துள்ளது.  அத்துடன் 13, மற்றும் 14 ஆகிய இருதினங்களிலும் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன எனக் கூறுகையில் இக்காவல்நிலைய அதிகாரிகளுக்கு எவ்வாறு மதுபானம்  கிடைத்தது எனும் கேள்வியும் தோன்றத்தான் செய்கிறது. மேலும் பாதுகாப்புப் பெட்டகத்தை திறக்க பயன்படுத்திய சாவி பொலிஸில் இருந்த சாவியா அல்லது திருடர்களிடமிருந்த அதற்கொத்த சாவியா எனும் கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அத்துடன் அச்சாவி பொலிஸ் நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்டதாயின் அதனை தொலைபேசி இயக்கும் அதிகாரி பார்த்திருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன. ஏனெனில் அவரின் இருக்கைக்கு நன்றாக தெரியும் வண்ணமே சாவிப் பெட்டி இருக்கிறது. பெட்டகத்தில் இருந்து துப்பாக்கிகளை திருடியவர் அதற்குரிய தோட்டாக்களை மட்டும் எடுக்கவில்லை.    அவ்வாறெனில் அவர்களிடம் அதற்கொத்த தோட்டாக்கள் உள்ளனவா? அல்லது தோட்டாக்களை வேறு வழிகளில் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் அவர்களுக்கு இருக்கின்றனவோ!; புரியாத புதிராகத்தான் இருக்கின்றது.

இச்சம்பவமானது எதன் பின்னணியாக விளங்குகிறது என்று ஆராய்கையில் அவை பல பிம்பங்களை தோற்றுவிக்கின்றன.  புதிதாக அமைக்கப்பெற்ற பொலிஸதிபரின் சேவையை இழிவு படுத்துவதற்காக இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. ஏனெனில் முன்னர் இப்பொலிஸ் நிலையத்தில்
நடைபெற்று வந்த பல முறைகேடான சம்பங்களை அவர் தடுத்திருப்பதனால் அப்பகுதியில் இலஞ்சம் கொடுத்து சட்டத்திற்கு புறம்பான தம் காரியங்களை செய்து கொள்பவர்களால் அவ்வாறான காரியங்களை இனி செய்ய முடியாததாலும் இவ்வாறானதொரு செயலை செய்திருக்கலாம் என்றும் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லக்கல பொலிஸ் நிலையத்திலுள்ள உள்ள பல அதிகாரிகள் லக்கலையே பிறப்பிடமாக கொண்டவர்கள். மக்களோடு பல தொடர்புகளை பேணிவரும் இவர்களை பயன்படுத்தி இவர்களுக்கு பணம் கொடுத்து தங்கள் காரியங்களை செய்து கொள்கிறார்கள் அங்கிருக்கும் சிற்சில தனவான்கள். ஆதலால் இங்கிருக்கும் அதிகாரிகளால் நீதியை சரியாக பின்பற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையறிந்த நிலையப் பொறுப்பதிகாரி ஒ. என். ஜெ. டப்ளியூ. கே. அமரசிங்ஹ இது தொடர்பாக மேலதிகாரிகளுக்கு முறைப்பாடொன்றையும் அளித்துள்ளார். வேலைநிறுத்தம் செய்யப்பட்டவர்களில் அத்தகு பொலிஸ் அதிகாரி ஒருவரும் அடங்குவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளுக்கு முன் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்ற போதும்
நாட்டில் சமாதானம் நிலவும் இவ்வேளையில் இவ்வாறான சம்பவம் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்துகின்றது. மேலும், இதன் இன்னொரு கோணமாக பாதாளக் குழுக்களால் இவ் ஆயுதக் கொள்ளை நடந்திருந்தால் அவை மிளளிக்கப்பட்டிராது. அரசியல் வேட்டை என்றாலும் இவ்ஆயுதங்கள் பதுக்கப்பட்டிருக்கலாமேயொழிய, அவை விகாரையில் விடப்பட்டிருக்காது.

ஆக இதன் பின்புலம் இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. அதுமட்டுன்றி இச்சம்பவத்தின் அடிமுடியை காண்பதற்கு துப்பாக்கிகளில் கைவிரலடையாள பரிசோதனை மற்றும் அன்று கடமையில் இருந்த அதிகாரிகளின் இரத்தப்பரிசோதனைகள் என்பன நடத்தப்பட்டுள்ளன. இன்னும் இவ்விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தாலும் லக்கல காவல்நிலையத்தில் ஒரு கறுப்பு ஆடு இருந்திருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகிக் கொண்டிருக்கின்றது!

No comments:

Post a Comment