Monday, June 13, 2016

நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா?

நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? இதை உறுதிப்படுத்தினால் அந்நிகழ்வு நிச்சயம் நிறைவேறும். இது ஒரு ரகசியம் அல்ல.

ஓடிக்கொண்டு இருக்கும் இந்த வாழ்கையில் ஒவ்வொரு கணமும் உங்களால் தீர்மானிக்கப்பட்டு உருவாக்கப் பட்டுக்கொண்டே ஓடுகிறது. நிச்சயமாக உங்களின் வாழ்க்கை வேறு ஒரு சக்தியால் தீர்மானிக்கப்படவில்லை. இதை நம்புவது அல்லது ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமான காரியம்தான்.
நமக்கு இந்த வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி இருந்தால் ஏன் எமக்கு விருப்பமான விதத்தில் எமது வாழ்க்கையை தீர்மானித்து உருவாக்க முடியாமல் இருக்கிறது என்ற கேள்வி உங்களுக்கும் எழக்கூடும். எமது வாழ்க்கை  அல்லது எமது நோக்கம்  எமது விருப்பப்படியே  உருவாக்கப்படுகிறது எனில் ஏன் நாம் விரும்பியபடி எமது வாழ்க்கை  அமைவது இல்லை?

நிச்சயமாக நாம் விரும்பியபடிதான் எமது வாழ்க்கை அமையும். இதில் சந்தேகமே தேவை இல்லை. நாம் எதை விரும்புகிறோம் என்பது மிகப்பெரும் உள்ளார்த்தம் உள்ள கேள்வியாகும். நாம் விரும்புவது என்று நாம் நினைக்கும் எல்லாவற்றையும் நாம் நிச்சயம் விரும்புகிறோமா? நாம் விரும்பவில்லை என்று நாம் நினைக்கும் எல்லாவற்றையும் உண்மையில் நாம் விரும்பவில்லையா?

உதாரணமாக நாம் ஒவ்வொருவரும் எமக்கு விபத்துக்கள் நடக்க வேண்டும் என்று விரும்புவதில்லை . ஆனாலும் சிலவேளை விபத்துக்கள்  நடக்கின்றதே? அது எப்படி? நிச்சயமாக அந்த விபத்தை ஈர்க்கும்  ஏதோ ஒரு சக்தி எம்முள் இருந்துதான் உருவாக்கி இருக்கிறது. எம்மை அறியாமலே நாம் உருவாக்கும் எண்ணங்களுக்கு இயங்கும் ஆற்றல் இருக்கிறது. எமது சிந்தனைகள் எமது உள்ளுணர்வுகள் எமது உணர்ச்சிகள் மட்டும் அல்லாது எமக்குள் எம்மை அறியாமலேயே எமது ஆழமான அடிமனதில் மறைந்து இருக்கும் எண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை இவைதான் எல்லா சம்பவங்களுக்கும் ஆதார சக்திகளாக இருக்கிறது. நாம் விபத்தை விரும்ப மாட்டோம் ஆனால் விபத்து பற்றி  செய்திகளை டிவியில் பார்ப்போடும் சில வேளைகளில் எம்மை அறியாமல் அந்த விபத்து பற்றிய எண்ணங்கள் எமக்குள் பதிந்து விடுகின்றன. விபத்து பற்றிய செய்தி எமக்குள் இருந்து  எவ்வளவு அழுத்தமாக அது தனது இயங்கு சக்தியை பெறுகிறதோ அந்த அளவு விபத்து நடக்கும் சாத்தியமும் அதிகமாகிறது.

சிருஷ்டியின் அற்புத சக்திகளை நாம் ஏன் அறியாமல் போய்விட்டோம் என்பது உண்மையில் கவலைக்கு உரிய விடயம்தான். நாம் இதுவரை எம்மை பற்றி சரியாக ஆராய்ச்சி செய்ய வில்லை என்றுதான்  கூறுவேன். நாம் சதா ஏதாவது ஒன்றின் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஓடுவதை நிறுத்தி விட்டால் நாம் ஏதோ பின்தங்கி விட்டோம் அல்லது தோற்று விட்டோம் அல்லது வாழவே இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுவோம். தன்னை மறக்காமல் ஓடிக்கொண்டே இருந்தால் அது நல்லது. ஆனால் தம்மை மறந்தல்லவா பலரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த உலகத்தில் நாம் எப்படி மகிழ்ச்சியாக வாழலாம்?  எப்படி நாம் நினைத்ததை எல்லாம் சாதிக்கலாம்? நாம் நினைத்தபடியே எமது வாழ்வு அமையுமா? அதற்கு நாம் என்னதான் செய்ய வேண்டும்? முதலில் எமது எண்ணங்களை நாம் ஒழுங்குப் படுத்திக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு எண்ணமும் எமது மனதில் உதிக்கும்போதும் இது நிச்சயம் ஒரு நாளில் ஒரு நிதர்சனமான உண்மையாகப் போகிறது என்று கருதிக் கொள்ளவேண்டும். இது முதல் படி.

இந்த எண்ணத்தை மட்டும் எமக்குள் உருவாக்கி விட்டால்  எமது எண்ணங்களுக்கு வலிமை வந்துவிடும். எமக்கு தெரிந்தோ தெரியாமலோ எமது மனதில் வந்து போகும் அத்தனை எண்ணங்களுக்கும் அத்தனை செய்திகளுக்கும் அத்தனை உணர்வுகளுக்கும் அத்தனை உணர்ச்சிகளுக்கும் நிச்சயம் சிருஷ்டியாக்கும்  சக்தி இருக்கிறது.

அது எவ்வளவு அழுத்தமோ அல்லது அழுத்தம் இல்லையோ அதற்கு ஏற்ற அளவு அது நிதர்சனமாக நடைபெறும். இதனால்தான் எமது மனதை ஒரு அதி சக்திவாய்ந்த மின்சாரம் போன்று கருத வேண்டும். நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ என்னென்ன எண்ணங்களுக்கு அல்லது என்ன செய்திகளை அதிகம் எண்ணுகிறீர்களோ அவற்றிக்கு உயிர்கொடுப்பது நீங்கள் தான் என்பதை மறக்க வேண்டாம்.

மனதின் வலிமையை நாம் இன்னும் சரியாக உணரவில்லை.
வருந்தி வருந்தி மனதையும் வருத்தி வருத்திக்கொண்டு இருந்தால் வருத்தம் தான் வரும். வாழ்க்கை வாராது.

வாழ்க்கை வேறு மகிழ்ச்சி வேறல்ல. இன்னும் தெளிவாக சொல்லப் போனால் இந்த பூமிக்கும் நாம் வந்த நோக்கமே வாழ்க்கைதான். இந்த வாழ்க்கை சகல சக்திகளும் கொண்டதாகும். எம்மை சுற்றி உள்ள இந்த பிரபஞ்சத்தை கொஞ்சம் உற்று நோக்கினால் சகல சிருஷ்டி ரகசியங்களும் தெளிவாகவே தெரியும். நாம்தான் கண்ணை மூடிக்கொண்டு யார்யாரோ சொல்வதை எல்லாம் நம்பிக் கொண்டு காலத்தை கடத்தி விட்டோம். இயற்கையை மிஞ்சிய சக்தி உலகில் எதுவுமே இல்லை.

ஒவ்வொருவருக்கும் தனக்கு தானே கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. ஆனாலும் நாம் சிந்திக்க கொஞ்சம் பயப்படுபவர்கள்.
சிந்திக்காமலேயே நம்புவதற்கு பழக்கப்படுத்தப் பட்டவர்கள். சந்தேகம்தான் உங்களை சிந்திக்க வைக்கும்  இலகுவில் நம்பி சரணடைந்து பின்பு போதை வஸ்து போன்று நிரந்தரமாக ஒரு தூக்க நிலையில் தான் நமது வாழ்வு பெரும்பாலும் கழிந்திருக்கிறது. சிந்தனைதான் மனிதர்களை வாழ வைத்திருக்கிறது.

ஆகவே உங்கள் சிந்தனைகளை தூண்டிவிடுங்கள். பின் அவையே ஓர் ஒளிப்பிளம்பை உண்டாக்கி உங்கள் வாழ்வை பிரகாசமடையச் செய்யும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

No comments:

Post a Comment